அழகிய சூரியன் உதித்திடும் நேரம்
பழம்பெரும் தியாகிகள் மாண்டதின் ஈரம்
உழவர்கள் அனுதினம் உழைத்ததன் சாரம்
உழைப்பவர் வர்க்கத்தின் உவமைகள் கூறும்
துடிப்புடன் உழைத்திடும் இளைஞர்கள் கோடி
வெடிப்புடன் உழைப்பதில் யாவரும்கில் லாடி
அடிக்கடி இடைபடும் இன்னல்கள் தேடி
பொடிபொடி யாக்குவர் அனைவரும் கூடி
தனியுகம் படைத்திடும் திறமைகள் உண்டு
பனியிலும் வெயிலிலும் உழைப்பவர் உண்டு
மனதிலே ஜெயித்திடும் உணர்வுகள் உண்டு
கனவிலும் நினைவிலும் ஜெயிப்பவர் உண்டு
புகழ்பெறும் ஆசையில்பணி மறப்பவர் இல்லை
இகழ்ந்திடும் போதிலும் வெறுப்பவர் இல்லை
புகலிடம் பொடிபட நினைப்பவர் இல்லை
அகத்தையும் புறத்தையும் தொலைப்பவர் இல்லை
சொர்க்கமும் நரகமும் அவரவர் பார்வையில்
சுற்றமும் சூழலும் தானென்ற போர்வையில்
கற்றலும் கேட்டலும் புரிந்திடும் கோர்வையில்
பெற்றிடும் இன்பங்கள் உழைப்பவர் வேர்வையில்
- காகிதன்
No comments:
Post a Comment