Pages

Saturday, January 5, 2008

கலைவாணியே...6





















வெண்தா மரைமே லமர்ந்தே யிருப்பவள்
வெண்தே கமதை கவியா யுணர்த்தியே
வீணை யொருகையா மோலை மறுகையாம்
கண்டே னுனது ருவை

பண்பா டிடவே யுனையே நினைந்தனன்
வெண்பா வதையே யுனக்காய் புனைந்தனன்
கண்பார்த் திடவா யதையே யிரந்தனன்
கண்பார்த் திடுவாயம் மா

வாணியைநி னைத்தால் வருமே கவிதைகள்
நானதையு ணர்ந்தேன் விதியாலே வாணியை
யென்னில் நிறைத்தே தொடர்வேன் பயணத்தை
தோணியாய வள்இருப் பாள்

கேள்வி யுமாயும் பதிலது வாயுமாய்
வாழ்க்கையின் சூட்சமம் கண்டிங்கு வாழ்க்கையை
என்வச மாக்கிய தேவியுன் பாதத்தை
முன்வந்து கும்பிடு வேன்

- காகிதன்

கலைவாணியே...5




















கலைவாணி உன்னுடைய பொற்பாதம் தீண்டி
நிலையான பைந்தமிழைக் கற்றேன் தலையான
உன்புகழை நாடெங்கும் போற்ற பொழுதெல்லாம்
கண்விழித்து பாவடிப்பேன் நான்

முறையான செந்தமிழை உன்னாலே கற்று
குறைவில்லா மென்புலமை பெற்றேன் இறையான
உன்வடிவை நெஞ்சுக்குள் வைத்தே நிறைவான
பண்வடிப்பேன் எந்நாளும் நான்

நிலையான உன்னுருவை நெஞ்சுக்குள் வைத்து
அலைபாயும் என்மனதை தைப்பேன் மலையாகும்
என்தவத்தை கண்டபின்பு நீயும் மலைத்திடுவாய்
என்னையுமுன் நெஞ்சில் நிறுத்து

விடையில்லா கேள்விகளை கேட்டிடுவாய் நீயும்
விடையறியா சூனியமாய் நானும் விடையறியும்
பக்குவத்தை நானறிய செய்து தடைகளெல்லாம்
போக்கிடுவாய் நானறிந்த நீ

- காகிதன்

கலைவாணியே...4





















கவிமழையில் நனைந்திடுவா கலைமகளே நிதமும்
கடலலையில் உன்சிரிப்பை பார்த்திடுவேன் தினமும்
பூக்களிலே உன்முகத்தை காட்டிடுவாய் நாளும்
பாக்களிலே உன்னுருவம் கண்டிடுவேன் நானும்

மனமுருகி கவியெழுதி மனங்குளிர வைப்பேன்
கனவினிலும் உன்புகழை அரங்கேறச் செய்வேன்
பகலிரவாய் கண்விழித்து பாட்டெழுத முனைவேன்
மனநிறைவாய் கவிமகளை கரம்கூப்பி தொழுவேன்

விதவிதமாய் காட்சிவரும் உனைஎண்ணிப் பார்த்தால்
ஒருவிதமாய் மயக்கம்வரும் உன்பெயரைக் கேட்டால்
சுரம்சுரமாய் தேடிவரும் உன்மனதை நினைத்தால்
சரம்சரமாய் தோடியாகும் உன்புகழைக் கோர்த்தால்

வானம்வரை அடுக்கிடுவேன் நான்வடிக்கும் நூலை
வாழும்வரை தொடுத்திடுவேன் நாதனது வேலை
வாடும்வரை கொடுத்திடுவேன் உனக்கான நாளை
வாழ்த்திடநீ வந்துவிடு தினந்தோறும் காலை

- காகிதன்

கலைவாணியே...3

















திருத்தொண்டன் நான்புரியும் திருபூஜை தன்னை
மனங்கொண்டு ஏற்றிடுவாய் கவிகாக்கும் அன்னை
வீருகொண்டு கவியேற்றும் சிறுபிள்ளை என்னை
கூறுகண்டு போற்றிடுவாய் கலைமகளே என்னை

ஒளியெல்லாம் உன்போல ஒளிராது என்றும்
ஒலியெல்லாம் உனைபோல ஒலிக்காது இன்றும்
மொழியெல்லாம் உன்போல இனிக்காது என்றும்
கலைச்செல்வி உன்புகழோ அழியாது என்றும்

முத்தமிழை உலகிற்கு அளித்தாயே அம்மா
இரத்தமெல்லாம் தேன்தமிழை நிறைத்தாயே அம்மா
புத்தியிலே உன்நினைவை வளர்த்தேனே அம்மா
பித்தனெனை வித்தகனாய் உணர்ந்தேனே அம்மா

பூமியிலே பிறந்தயென்னை கவியெழுத வைத்தாய்
ஊமையெனை வரத்தாலே சுரம்பாட வைத்தாய்
நாமகளே நாதன்எனை கவியாக்கி பார்த்தாய்
என்மதியை உன்மதியால் நூலாக்கித் தைத்தாய்

- காகிதன்

கலைவாணியே...2





















விருந்தோம்பல் உனக்காக படைப்பேனே தேவி
விருந்தாக கவிநூறு படிப்பேனே கூவி
தவறாமல் வருவாயோ கலைவாணி தாயே
தவக்கோலம் அணிவேனே வரவேண்டும் நீயே

மலரெல்லாம் உன்வாசம் அறிவேனே நானும்
மனமெல்லாம் உன்நேசம் அறிவாயோ நீயும்
உடலெல்லாம் பூரிக்கும் உனையென்னும் போது
உயிரெல்லாம் கூத்தாடும் உனைப்பாடும் போது

ஒருவார்த்தை சொன்னாலே உயிர்வாழ்வேன் நானே
உன்பேரைச் சொன்னாலே உளமுருகும் தானே
கண்ணோடு வாழ்ந்தவளே கனவேடு வாராய்
என்னோடு கலந்தவளே நினைவேடு நில்லாய்

அழகான பொற்சிலயே சிரித்தாயே பூவாய்
அரங்கேறும் என்கவியோ பொலிவான நூலாய்
அணைப்பாயோ என்னைநீ பாசமிகு தாயாய்
இருப்பேனே என்றென்றும் நேசமிகு சேயாய்

- காகிதன்

கலைவாணியே...1





















சுதியோடு கவிபாட கொண்டேனே ஆசை
சுதிதேடி தவிக்கின்றேன் தருவாயோ பாட்டை
வருங்காலம் எனைகேட்கும் தரமான கோர்ப்பை
தருவாயோ கலைவாணி எனக்கந்த வாய்ப்பை

வெகுநாளாய் இருந்தேனே இருளென்னும் வீட்டில்
திருநாளில் புகுந்தேனே உன்னிதயக் கூட்டில்
சரிபாதி உனக்காக தருவேனே பாட்டில்
தரவேண்டும் அருள்வேண்டும் கவிபாடும் ஆற்றல்

பூங்கோதை புகழ்பாடும் வில்லி புத்தூரில்
பிறந்தேனே வளர்ந்தேனே பரந்தாமன் பேரில்
உனக்காக வடித்தேனே கவிமாலை நூறில்
ஒருமாலை அணிந்தேவா அசைந்தாடும் தேரில்

நாள்தோறும் புரிவேனே தவறாமல் பூசை
மறுக்காமல்நீ வரவேண்டும் அடியேனென் ஆசை
அறியாமல் நான்கேட்கும் பணிவான இச்சை
பொறுத்திடுக தவறென்றால் அறியேனென் பேச்சை

- காகிதன்