Pages

Friday, November 30, 2007

உழைப்பவர் உலகம்

அழகிய சூரியன் உதித்திடும் நேரம்
பழம்பெரும் தியாகிகள் மாண்டதின் ஈரம்
உழவர்கள் அனுதினம் உழைத்ததன் சாரம்
உழைப்பவர் வர்க்கத்தின் உவமைகள் கூறும்

துடிப்புடன் உழைத்திடும் இளைஞர்கள் கோடி
வெடிப்புடன் உழைப்பதில் யாவரும்கில் லாடி
அடிக்கடி இடைபடும் இன்னல்கள் தேடி
பொடிபொடி யாக்குவர் அனைவரும் கூடி

தனியுகம் படைத்திடும் திறமைகள் உண்டு
பனியிலும் வெயிலிலும் உழைப்பவர் உண்டு
மனதிலே ஜெயித்திடும் உணர்வுகள் உண்டு
கனவிலும் நினைவிலும் ஜெயிப்பவர் உண்டு

புகழ்பெறும் ஆசையில்பணி மறப்பவர் இல்லை
இகழ்ந்திடும் போதிலும் வெறுப்பவர் இல்லை
புகலிடம் பொடிபட நினைப்பவர் இல்லை
அகத்தையும் புறத்தையும் தொலைப்பவர் இல்லை

சொர்க்கமும் நரகமும் அவரவர் பார்வையில்
சுற்றமும் சூழலும் தானென்ற போர்வையில்
கற்றலும் கேட்டலும் புரிந்திடும் கோர்வையில்
பெற்றிடும் இன்பங்கள் உழைப்பவர் வேர்வையில்

- காகிதன்

மனிதத்தைப் போற்றிடு

மேட்டிமை பேசாதே மேன்மையை உணர்த்திடு
நாட்டாமை செய்யாதே நாநிலம் வணங்கிடு
கூட்டமாய் நில்லாதே கூட்டத்தை நிறுத்திடு
ஓட்டமாய் ஓடாதே ஓட்டத்தை நிறுத்திடு

நேரிய வழியில் சீரிட பழகிடு
கூரிய பார்வையால் போரிட பழகிடு
சூரிய ஒளியாய் படர்ந்திட பழகிடு
சீரிடும் புலியாய் நடந்திட பழகிடு

தவறுகள் செய்திட தயங்கிநீ நின்றிடு
தவறுகள் இருப்பின் திருத்திட முனைந்திடு
தவறுகள் செய்வது தவறில்லை உணர்ந்திடு
தவறென தெரிந்தபின் செய்வதை நிறுத்திடு

தனக்கென வாழ்ந்திட ஒருவழி வகுத்திடு
தனக்கான பாதையில் துணிவுடன் நடந்திடு
தனக்கென்ற பாணியில் தனித்துவம் புரிந்திடு
தனிமையை முழுமையாய் மாற்றிட தெளிந்திடு

பிறருக்கு உதவியாய் இருப்பதில் மகிழ்ந்திடு
பிறரது துன்பத்தை போக்கிட நினைத்திடு
அறத்துடன் பொருளுடன் இன்பமாய் வாழ்ந்திடு
பிறந்ததன் பயனாய் மனிதத்தைப் போற்றிடு

- காகிதன்

வாழ்க்கையைத் தேடு

பறவைகள் பறப்பது விடியலைத் தேடி
பறவையாய்ப் பறந்திடு வாழ்க்கையைத் தேடி
சிறகுகள் முளைப்பது பறந்திடத் தானே
சிறகினை வளர்த்திடு விண்ணிலே பறந்திடு

யாரும் சொல்லாத வார்த்தைகள் தேடு
யாரும் செல்லாத வழியினை நாடு
நேரம் தவறாமல் உழைத்திடப் பழகு
பாரம் இல்லாத வாழ்க்கையே உனது

சிலையாய் இருந்தால் அழகாய் இருப்பாய்
சிற்பியா யிருந்தால் சிலையை வடிப்பாய்
சிலையா யிருந்து ஜொலிப்பதைக் காட்டிலும்
சிற்பியா யிருந்து சிலையினைப் படைத்திடு

கனவுகள் என்பது துக்கத்தில் இல்லை
கனவுகள் இருப்பின் தூக்கமும் தொல்லை
கனவுகள் கண்டிடு தூக்கத்தை வென்றிடு
கனவுகள் தானே வாழ்க்கையின் பூஞ்செடி

ஜனனமும் மரணமும் நொடியினில் நிகழ்ந்திடும்
ரணங்களும் பிணங்களும் கடைசியில் அடங்கிடும்
தயக்கமும் மயக்கமும் தினம்தினம் வந்திடும்
எழுச்சியும் மலர்ச்சியும் வாழ்க்கையைத் தந்திடும்

-காகிதன்