Pages

Tuesday, September 7, 2010

கண்கள்













அழகிய பார்வையால் அறிமுகம் செய்தாய் 
அவனியின் அழகினை அறிந்திடச் செய்தாய் 
ஆதவன் ஒளியினை உணர்ந்திடச் செய்தாய் 
ஔவையின் மொழியை படித்திடச் செய்தாய் 

 கருணையால் அன்பினை வழங்கிடச் செய்தாய் 
கவலையில் என்னைக் கலங்கிடச் செய்தாய் 
காண்பவர் உள்ளத்தை விளங்கிடச் செய்தாய் 
கௌரவ தோற்றத்தில் வாழ்ந்திடச் செய்தாய் 

 நவரசம் முகத்திலே படர்ந்திடச் செய்தாய் 
நயத்துடன் பாங்கினில் தொடர்ந்திடச் செய்தாய் 
நாளொரு மேனியாய் ஜொலித்திடச் செய்தாய் 
நௌகரி நேரத்தில் உழைத்திடச் செய்தாய் 

 பயத்தினை போக்கிநீ விளித்திடச் செய்தாய் 
பறவைகள் பறப்பதை களித்திடச் செய்தாய் 
பார்வையால் காதலை பகிர்ந்திடச் செய்தாய் 
பௌர்ணமி ஒளியில் மகிழ்ந்திடச் செய்தாய் 

 மலர்களின் சிரிப்பிலே வீழ்ந்திடச் செய்தாய் 
மழலையின் சிரிப்பில் ஆழ்ந்திடச் செய்தாய் 
மார்கழிப் பனியினை ரசித்திடச் செய்தாய் 
மௌனத்தின் மொழியை புரிந்திடச் செய்தாய் 

 ரகசிய மொழிகளை உறைத்திடச் செய்தாய் 
ரம்மிய முகத்தினை ஒளிர்ந்திடச் செய்தாய் 
ராத்திரி நேரத்தில் உறங்கிடச் செய்தாய் 
ரௌத்திரம் இல்லாமல் தெளிந்திடச் செய்தாய்

Sunday, September 5, 2010

வாழ்க்கைப் பூந்தோட்டம்

வாழ்க்கைப் பூந்தோட்டம்..!

உனக்குள் உறங்கும் உலகம் கண்டிடு
உனையே அறியும் வித்தை கொண்டிடு
இணக்கம் கொண்டே வாழ்ந்திடப் பழகிடு
பிணக்கம் இல்லாத வாழ்க்கை உன்னது

கடலும் மலையும் காட்டிடும் அதிசயம்
மழையும் வெயிலும் செய்திடும் அற்பணம்
உடலும் உயிரும் புரிந்திடும் சாகசம்
உணர்ந்தால் உனக்கே வாழ்க்கை விளங்கிடும்

தனிமையில் உன்னிடம் உண்மைகள் பேசிடும்
மனிதரின் வாழ்க்கையின் சூட்சமம் சொல்லிடும்
இனியொரு சபதம் செய்திடக் கேட்டிடும்
மனிதா உன்னிடம் வாழ்க்கையை விளக்கிடும்

பிறப்புக்கும் இறப்புக்கும இடைப்பட்ட நிலையதை
இறப்புக்கு முன்னரே தெளிந்திட்டால் நிம்மதி
மனிதனின் மறுபக்கம் மாயமலர்த் தோட்டம்
உணர்ந்துநீ தெளிந்திட்டால் வாழ்க்கையே பூந்தோட்டம்

- காகிதன்