Pages

Thursday, November 1, 2007

சிதறல்கள்

மலந்திடும் வாசப் பூவிலும்
புலர்ந்திடும் வைகறை பொழுதிலும்
வீசிடும் தென்றல் காற்றிலும்
பேசிடும் பிஞ்சுக் குழந்தையிலும்

தூவிடும் முத்துச் சாரலிலும்
கூவிடும் குயிலின் குரலிலும்
குளிர்ந்திடும் பௌர்ணமி நிலவிலும்
ஒளிர்ந்திடும் மாலை சூரியனிலும்

படர்ந்திடும் காலை பனியிலும்
நடந்திடும் பசுமை புல்வெளியிலும்
ஆடிடும் வண்ண மயிலிலும்
ஓடிடும் பஞ்சு மேகத்திலும்

உனக்கான என் காதலின்
எண்ணச் சிதறல்களை
ஒவ்வொரு துளியாய்
ஒவ்வொன்றிலும் சிதறவிட்டிருக்கிறேன்...

-காகிதன்

மாலை சூடும் மணநாள்

ஒருமுறை நடக்கும் திருநாள்
பலமுறை இனிக்கும் ஒருநாள்
இருவரை இணைக்கும் ஒருநாள்
திருமறை சொல்லும் மணநாள்

பலரது ஆசிகள் கொண்டு
மலரது மலர்வதைக் கண்டு
உளமது மகிழ்ச்சியில் இன்று
மிளிருது வாசணைச் செண்டு

கனவிலே கண்டிட்ட காட்சிகள்
நினைவிலே நடந்திடும் நீட்சிகள்
மனதிலே ஒளிர்ந்திடும் தீபங்கள்
உணர்விலே பதிந்திடும் ரூபங்கள்

உறவுகள் வாழ்த்திடும் நேரம்
உதடுகள் விரிந்திடும் தூரம்
நன்மைகள் விளங்கிடும் நேரம்
தீமைகள் விலகிடும் தூரம்

கொண்டவள் சிரித்திடும் போது
கண்டுநீ சிரித்திடு போதும்
அண்டமும் மகிழ்ந்திடும் வண்ணம்
கொண்டிடு வாழ்க்கையில் திண்ணம்

உன்னிடம் உள்ளதை கொடுத்தால்
தன்னிடம் உள்ளதை தருவாள்
சொன்னதை மனதில் வைத்தால்
எண்ணிய வாழ்க்கை கிடைக்கும்

- காகிதன்

காதல் ராகம்

கண்கள் இரண்டும் பார்க்கும் நேரமிது
காதல் பிறக்கிறது
கைகள் இரண்டும் கோர்க்கும் நேரமிது
கல்யாணம் நடக்கிறது.

பூவும் காற்றும் சேரும் நேரமிது
மோகம் பிறக்கிறது
தோளில் நீயும் சாயும் நேரமிது
தேகம் இனிக்கிறது.

வானும் மண்ணும் சேரும் நேரமிது
வான்மழை பொழிகிறது.
நீயும் நானும் சேரும் நேரமிது
இதயம் இனிக்கிறது.

காற்றில் ராகம் சேரும் நேரமிது
சங்கீதம் பிறக்கிறது
உன்னில் என்னை சேர்க்கும் நேரமிது
ஊடல் பிறக்கிறது.

- காகிதன்

திருமணம் ஆனால்..

புதுவெள்ளம் நெஞ்சுக்குள் தினம்துள்ளும்
பொழுதெல்லாம் மனசுக்குள் கதைசொல்லும்
இரவெல்லாம் இதயத்தில் குடிகொள்ளும்
பகலெல்லாம் இரவாக மாற்றச்சொல்லும்

புதுராகம் மனசுக்குள் தினம்கேட்கும்
புதுப்பூக்கள் நெஞ்சத்தில் தினம்பூக்கும்
கதிரவனை கண்டாலே வெறுப்பாகும்
பதிவிரதை துணையிருந்தால் சுகமாகும்

மனைவியது விருப்பத்தை அறியச்சொல்லும்
மனம்திறந்து அவளிடத்தில் பேசச்சொல்லும்
மகிழ்ச்சியிலே மற்றதெல்லாம் மறக்கச்சொல்லும்
மனமுவந்து இன்பத்தை அளிக்கச்சொல்லும்

துக்கத்தை தொலைதூரம் அழைத்துச்செல்லும்
தூக்கத்தை பலநேரம் இழக்கச்சொல்லும்
வெக்கத்தை அடியோடு மறக்கச்சொல்லும்
பக்கத்தில் அவளோடு இருக்கச்சொல்லும்

- காகிதன்

வேலைதேடி

வறுமைவந்து என்னிடத்தில் வக்கனையாய் சிரிச்சுநிக்க
வறுத்தெடுக்கும் வெயிலிலும் உழச்சிடவே மனம்துடிக்க
வருத்தமெல்லாம் இல்லயிங்க வயித்துபசி தாங்கலிங்க
பொருத்தமில்லா சூழ்நிலையால் வறுமையில மாட்டிக்கிட்டேன்

தெருத்தெருவா அலஞ்சிருக்கேன் வேலதேடித் தொலஞ்சிருக்கேன்
கருத்தவுடல் காரனென்றோ வேலதர மறுக்குறாங்க
ஒருத்தர்கூட முன்வரல வேலமட்டும் குதிரக்கொம்பாய்
ஒருத்தன்வந்தான் அவனுங்கூட வேலயில்ல ஓடிப்போன்னான்

படிச்சுபல பட்டமெல்லாம் வீட்டுலதான் வச்சுருந்தேன்
படிப்படியா முன்னேற பகல்கனவும் கண்டிருந்தேன்
படிச்சதெல்லாம் வீணாகி பலனில்லாம போனபின்ன
வடிச்சகண்ணீர் மட்டுந்தாங்க வீட்டுக்குள்ள நெறஞ்சிருக்கு

அப்பவேநான் அப்பாசொல்ல கேட்டிருந்தா பொழச்சிருப்பேன்
இப்பயில்ல புத்திசொல்ல அப்பாகூட போயிட்டாரே
வேலதேடி பயனுமில்ல விவசாயம் செய்யலான்னு
வயலதேடி போறேனுங்க வழியனுப்ப வாரிகளா?

- காகிதன்

இல்லறத் திருநாள்

அழகிய காதலின் அரங்கேற்றம்
பழகிய அன்பின் வெளித்தோற்றம்
இளகிய நெஞ்சத்தின் ஒருதோற்றம்
திருமண நாளாய் உருமாற்றம்

கலியுக ராமன் கைகளிலே
இணைந்தது ஜானகி பொற்கரங்கள்
சிலையென அவளை வடித்திடவே
ஒருவரு மில்லை தரணியிலே

உறவுகள் கூடி இருக்கையிலே
அரணது கைகள் இடுப்பினிலே
விரும்பிய இதயம் தடுக்கையிலே
அரும்பிய வெட்கம் யாரரிவார்

இமயவன் புரிந்திடும் சிலுமிஷங்கள்
இருதய சுரங்கத்தின் பொக்கிஷங்கள்
இளையவள் இதயத்தின் ரகசியங்கள்
இனித்தது மணவறை சம்பவங்கள்

தனிமையின் ரகசியம் அறிந்திடவும்
இனிமையின் இன்பத்தை விளக்கிடவும்
இணைந்தினி யில்லறம் நடத்திடவும்
இனியவன் துணையாய் வந்துவிட்டான்

காந்தனின் கரத்தை பிடிக்கையிலே
பூந்தளிர் உதட்டை கடிக்கயிலே
கூந்தலி லிருக்கும் பூக்களுமே
விழுந்தது வெட்கி தரையினிலே

ஆணின ஆதவன் முகம்பார்த்து
பேணிய பெண்மையை புறம்சாய்த்து
கூரிய பார்வையால் கோமகனை
உரித்தது கோதையின் கயல்விழிகள்

கனிந்தது காதல் நன்னாளில்
அணிந்தது மோகன பொன்னாளில்
இணைந்தது இருமணம் இந்நாளில்
இனித்தது இல்லற திருநாளில்

- காகிதன்