Pages

Saturday, February 2, 2008

என் பேசும் மடந்தையின் பேசா மொழிகள்..!

காலை எழுந்ததும்
ஏன்தான் விடிந்ததோ
என்றே உரைக்கும் உன் கண்கள்..!

காலை பனியிலே
புற்களில் நடக்கையில்
தாளம் போடும் உன் பற்கள்..!

காய்கறி நறுக்கையில்
கைகளில் குலுங்கியே
கானங்கள் படிக்கும் உன் வளையல்கள்..!

சாலையில் நடக்கையில்
வாகன இரைச்சலிலும்
சாதகம் செய்யும் உன் கொலுசுகள்..!

மாலை தென்றலில்
சோலையில் நடக்கையில்
அலையாய் ஆடிடும் உன் கூந்தல்..!

பாசம் வருகையிலும்
நேசம் வருகையிலும்
கேசம் வருடும் உன் விரல்கள்..!

நேரம் கடந்து நான்
இரவில் வருகையில்
எனக்காய் துடிக்கும் உன் இதயம்..!

நான் வடிக்கும் கவிதையை
படித்து முடிக்கையில்
மெல்ல சிரித்திடும் உன் இதழ்கள்..!

உன் பேசா மொழிகளை
தினமும் ரசித்து
கவியாய் உருகும் நானோ உந்தன்???!!!

- காகிதன்

திருமண வி(ப)த்து

திருமண வி(ப)த்து அது ஒரு அழகிய குடும்பம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து வந்தார்கள். மோகன் தான் குடும்பத்தலைவர். தன் நான்கு மகன்களையும் மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்த்திருந்தார். அந்த ஊரில் வாழும் மக்கள் அனைவரும் மோகன் குடும்பத்தின்மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.
ஒரு சமயம் அனைவரும் திருப்பதிக்குச் சென்றிருந்தனர்.

திருப்பதியிலிருந்து சென்னைக்கு திரும்பும் வழியில் திடீரென அந்த விபத்து நிகழ்ந்தது. எதிரில் வந்த சுமோ மோகன் வீட்டு வண்டியின் மேல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆச்சரியப்படும் வகையில் எதிரே வந்த வண்டியில் கூட இதே போன்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அது கோபியின் குடும்பம். திருச்சியைச் சேர்ந்த கோபிக்கு நான்கு பெணகபிள்ளைகள். வண்டிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் அருகில் இருந்த பள்ளத்தில் சரிந்து விழுந்தது.

இறைவன் அருளோ அவர்கள் செய்த புண்ணியமோ எல்லோரும் உயிர்சேதம் இல்லாமல் தப்பினர். வண்டியின் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நேர்ந்தது. இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொள்ளவில்லை, மாறாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். வண்டிகள் இரண்டும் சேதமானது அதனால் மோகன் இரண்டு வாடகை வண்டிகளை எடுத்துக்கொண்டு கோபி குடும்பத்தினரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மேலும் மோகன் தன்வீட்டில் இரண்டொருநாள் தங்கிவிட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

ஊரில் மோகனுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் அந்த இரண்டு நாட்களிலேயே கோபி நன்கு தெரிந்துகொண்டார். இதுபோன்ற ஒரு நல்ல குடும்பத்தில் தன் பெண்களை திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்று வெகு நாளாக ஆசைகொண்டிருந்தார். தன் மனைவியோடு கலந்துபேசி ஊருக்கு கிளம்பும்போது அதைக் கேட்டும்விட்டர். மோகனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அடுத்த முகூர்த்த்த்தில் நான்குபேருக்கும் ஒரே மேடையில் திருமணம் இனிதே நிறைவேறியது.

- காகிதன்

முதல் பய(ண)ம்

அந்த கருவேலங்காட்டிக்குள் தனியாக நடந்து செல்வதென்றால் அதிவீர சூரன் கூட ஒரு நிமிடம் யோசிப்பான். வடிவேல் பிறந்தது முதலே மிகவும் பயந்த சுபாவம் உடையவன். உறங்கும்போதுகூட அவன் அம்மாவின் சேலைத் தலைப்பை பிடித்துக்கொண்டுதான் உறங்குவான். வடிவேலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இப்பொழுதும் இருட்டில் நடப்பதென்றால் அவனுக்கு அலாதி பயம்தான்.

ஒருநாள் வேலை முடிவதற்கு தாமதமானதால் அன்று இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்தான். அவன் ஊருக்குள் வரவேண்டுமானால் அந்த கருவேலங்காட்டை கடந்துதான் வரவேண்டும். பேருந்தில் வரும்போது அதையே நினைத்துக்கொண்டு வந்தான். அவன் நிறுத்தம் வந்ததும் இறங்கி நடுக்கத்துடன் நடக்க ஆரம்பித்தான். காட்டின் எல்லை தொடங்கியது. கண்களில் கண்ணீர் வந்தது வடிவேலுக்கு, இன்று எப்படி வீட்டிற்கு செல்வது என்று விழித்துக்கொண்டிருந்தான்.

காட்டின் உள்புறத்திலிருந்து ஏதோ ஒரு உருவம் கையில் குழந்தையுடன் நடந்துவருவது தெரிந்தது. ஆம் அது வடிவேலுவின் மனைவி விமலாதான். உங்களுக்கு இருள் என்றால் பயம் என்று அத்தை சொன்னார்கள் அதனால்தான் உங்களைக் கூட்டிச்செல்வதற்காக இங்கே காத்திருந்தேன், வாருங்கள் செல்லலாம் என்றாள் விமலா.

உலகத்தில் சூரியன் என்று ஒன்று இல்லாதவரை இந்த பூமியே இருட்டுதான். மனதில் தைரியம் என்ற சூரியன் இல்லாதவரை மனம் ஒரு இருண்ட அறைதான், விமலா அவனுக்கு அளித்த விளக்கம் அவன் மனதில் தைரியம் என்ற சூரியனை உதிக்கச்செய்தது. முதல்முறையாக வடிவேலு பயமில்லாத தன் முதல் பயணத்தைத் தொடங்கினான்.

கலப்பு ம(ர)ணம்

முருகனும் ஜான்ஸியம் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். இரண்டு நாட்களுக்குப்பிறகுதான் இரு வீட்டுக்கும் தெரிய வந்தது. ஒரு மதத்தவர் ஓடிவிட்டாலே பெரிய அளவில் பிரச்சினைகள் வெடிக்கும். இரு வேறு மதத்தவர் என்றால் சொல்லவா வேண்டும். கலவரம் வெடித்தது. இரு வீட்டாரும் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். மேலும் இருவரது வீட்டிலிருந்து ஆளுக்கு ஒரு பக்கம் தேட ஆரம்பித்தனர். யார் கிடைத்தாலும் அவர்களை சாகடிப்பது என்று முடிவெடுத்தனர்.

வழக்கமாக அவர்கள் செல்லும் இடங்கள், தோழர்கள் தோழிகள் வீட்டில் சென்று விசாரித்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் இவர்கள் இருவரும் காதலித்திருந்த விஷயம் பற்றி தெரியவில்லை. அவர்கள் புகைப்படங்களை பத்திரிக்கையில் கொடுத்து கண்டுபிடித்து தரும்படி விளம்பரம் கொடுத்தனர்.

இரண்டு மாதங்கள் உருண்டோடியது பலன் பூஜ்ஜியம். இறுதியில் ஒரு கடிதம் இரண்டு வீட்டிற்கும் ஒரே நேரத்தில் வந்தது. நாங்கள் இருவரும் காதலித்தோம் எங்கள் வாழ்க்கையை நாங்களே தீர்மானிக்கும் வயதில் தீர்மானித்துக்கொண்டோம். எங்கள் திருமணம் உங்களுக்கு தடையென்றால் நாங்கள் மூன்றாம் மதத்திற்கு மாற தயாராய் இருக்கிறோம். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்த கடிதத்திற்கு பத்திரிக்கை வாயிலாக பதிலளிக்காத பட்சத்தில் எங்கள் பிணங்கள் இடம்மாற்றி உங்கள் விலாசத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

இரு குடும்பங்களும் தனித்தனியாக அவர்களை கொல்ல நினைத்தது, ஆனால் காதலர்கள் இருவரும் அவர்கள் குடும்பத்தாரின் வெறித்தனத்தை மாற்றி சம்மதிக்க வைத்தார்கள். இரு குடும்பமும் பத்திரிக்கை வாயிலாக பதிலளித்தனர். இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.

- காகிதன்

Monday, January 28, 2008

நுனிப்புல்




நுனிப்புல் – பாகம் 1
இது நாவல் அல்ல… வாழ்க்கை

இந்த நாவலின் நோக்கம் இந்த வாழ்க்கையின், உலகம் தோன்றியதின் உண்மை என்ன என்பதை ஒருவரும் அறியாதபோதிலும், அறிந்து கொண்டவர்கள் போல் வாழும் வாழ்க்கை முறையை அலசுகிறது. ஒரு கிராமத்தில் நடக்கும் விசயங்களை கற்பனை செய்து எழுதப்பட்டு இருக்கிறது.

வாசன் எனும் கதாபாத்திரம் கடவுள் எனும் சக்தியைக் குறித்து கேள்வி எழுப்புவதாயும் அதே தருணத்தில் எதிர்ப்பாளாராக இல்லாமல் அமைந்து உள்ளது. வாசனுக்கு ஏற்படும் இறைவன் பற்றிய உணர்வுகள் குறிப்பிடப்பட்டு உள்ளது முக்கியமாக சிலை எடுக்கும் விபரம், திருவிழா தருணங்கள். வினாயகம் எனும் கதாபாத்திரம் இறைவன் அவரது கனவில் கூறிய செடியினை தான் வாங்கிய நிலத்தில் பயிரிட்டு உலகம் காத்திட வேண்டும் எனவும் அதற்கு வாசனது ஒத்துழைப்பு அவசியம் என கருதி வாசனை தன்னுடன் இணைந்து இருக்க செய்கிறது.

நட்பு பற்றி சாரங்கன் – வினாயகம், வாசன் –பாரதி – கிருத்திகா, பொன்னுராஜ்-முத்துராசு என கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் மூலம் விளக்கப்பட்டு உள்ளது.

வாசனது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் அவனிடம் பயில வரும் குழந்தைகள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு பக்கபலமாக இருந்து சிறப்பிக்கிறது. வினாயகத்தின் தம்பி சேகரும் அவரது குழந்தைகள் பாரதி, அருண் எனும் கதாபாத்திரங்கள் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பெருமாள் எனும் கதாபாத்திரம் முதியவராகச் சித்தரிக்கப்பட்டு அவரது ஸ்டெம் செல்களில் இருந்து நியுக்ளியஸ் பிரிக்கப்பட்டு குளோனிங் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவரது இறுதி ஆசையான ஆஸ்ரமம் கட்ட வாசனது ஒத்துழைப்பினை அவர் இறக்கும் முன்னர் பெற்றுக் கொள்கிறார். மாதவி எனும் கதாபாத்திரம் நடக்கப் போகும் நிகழ்வுகளை தான் அறிந்து இருந்தாலும் அந்த நிகழ்வுகள் பற்றி அவருக்கு சுயமாகத் தெரியாது என்பது போல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நூலின் முக்கிய அம்சங்களாக நெகாதம் எனும் செடியும், குளோனிங்கும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பல அறிவியல் விசயங்கள் உள்ளடக்கி ஆன்மிகத்தையும் சேர்த்து சமூக குடும்ப சூழ்நிலை பற்றி எழுதப்பட்டு இருக்கிறது இந்த

நூல்.---------------------------தொடர்புக்கு:டாக்டர். வெ. இராதாகிருஷ்ணன் (ஆசிரியர்)விலை - ரூ.130 மட்டுமே

Thursday, January 10, 2008

ஆறாம் அறிவைப் பெற்றுவிட்டாயோ..!


அமைதியான உன் பார்வையின் அர்த்தம் என்ன?
யாருக்காக காத்திருக்கிறாய் மணிக்கணக்கில்
காதலிக்காக மணிக்கணக்காய் காத்திருக்கும்
மனிதனாய் எப்போது மாறினாய்?

மனிதர்கள் மறந்த பொறுமையும் ஒழுக்கமும்
கற்பிக்க நினைத்திங்கு வந்தாயோ?
மதவெறி இனவெறி கொண்டோரை இங்கு
விழுங்கிடத் தான் நீயும் வந்தாயோ?

நிழலிலும் வெயிலிலும் சரிபாதி அமர்ந்தது
நிஜத்தையும் பொய்ப்பையும் உணர்த்திடத்தானோ
அழகையும் அழுக்கையும் சரிபாதி கொண்டது
அழுக்கிலும் அழகுண்டென்று உணர்திடத்தானோ?

வானரக் கூட்டத்தில் தவறியே பிறந்தநீ
வானறம் கற்றுத்தான் தெளிந்தாயோ?
வீணரும் வினையரும் கலந்த இம்மானுடத்தை
விரட்டியடிக்கவும் துணிந்தாயோ?

உனக்கான அரம்புகள் அனைத்தையும் மறந்து
வேதாந்தி போலே உட்கார நினைத்தே
உலகத்தின் மறையை உணத்திடும் நீயும்
ஆறாம் அறிவை பெற்றுவட்டாயோ!?



- காகிதன்

Saturday, January 5, 2008

கலைவாணியே...6





















வெண்தா மரைமே லமர்ந்தே யிருப்பவள்
வெண்தே கமதை கவியா யுணர்த்தியே
வீணை யொருகையா மோலை மறுகையாம்
கண்டே னுனது ருவை

பண்பா டிடவே யுனையே நினைந்தனன்
வெண்பா வதையே யுனக்காய் புனைந்தனன்
கண்பார்த் திடவா யதையே யிரந்தனன்
கண்பார்த் திடுவாயம் மா

வாணியைநி னைத்தால் வருமே கவிதைகள்
நானதையு ணர்ந்தேன் விதியாலே வாணியை
யென்னில் நிறைத்தே தொடர்வேன் பயணத்தை
தோணியாய வள்இருப் பாள்

கேள்வி யுமாயும் பதிலது வாயுமாய்
வாழ்க்கையின் சூட்சமம் கண்டிங்கு வாழ்க்கையை
என்வச மாக்கிய தேவியுன் பாதத்தை
முன்வந்து கும்பிடு வேன்

- காகிதன்

கலைவாணியே...5




















கலைவாணி உன்னுடைய பொற்பாதம் தீண்டி
நிலையான பைந்தமிழைக் கற்றேன் தலையான
உன்புகழை நாடெங்கும் போற்ற பொழுதெல்லாம்
கண்விழித்து பாவடிப்பேன் நான்

முறையான செந்தமிழை உன்னாலே கற்று
குறைவில்லா மென்புலமை பெற்றேன் இறையான
உன்வடிவை நெஞ்சுக்குள் வைத்தே நிறைவான
பண்வடிப்பேன் எந்நாளும் நான்

நிலையான உன்னுருவை நெஞ்சுக்குள் வைத்து
அலைபாயும் என்மனதை தைப்பேன் மலையாகும்
என்தவத்தை கண்டபின்பு நீயும் மலைத்திடுவாய்
என்னையுமுன் நெஞ்சில் நிறுத்து

விடையில்லா கேள்விகளை கேட்டிடுவாய் நீயும்
விடையறியா சூனியமாய் நானும் விடையறியும்
பக்குவத்தை நானறிய செய்து தடைகளெல்லாம்
போக்கிடுவாய் நானறிந்த நீ

- காகிதன்

கலைவாணியே...4





















கவிமழையில் நனைந்திடுவா கலைமகளே நிதமும்
கடலலையில் உன்சிரிப்பை பார்த்திடுவேன் தினமும்
பூக்களிலே உன்முகத்தை காட்டிடுவாய் நாளும்
பாக்களிலே உன்னுருவம் கண்டிடுவேன் நானும்

மனமுருகி கவியெழுதி மனங்குளிர வைப்பேன்
கனவினிலும் உன்புகழை அரங்கேறச் செய்வேன்
பகலிரவாய் கண்விழித்து பாட்டெழுத முனைவேன்
மனநிறைவாய் கவிமகளை கரம்கூப்பி தொழுவேன்

விதவிதமாய் காட்சிவரும் உனைஎண்ணிப் பார்த்தால்
ஒருவிதமாய் மயக்கம்வரும் உன்பெயரைக் கேட்டால்
சுரம்சுரமாய் தேடிவரும் உன்மனதை நினைத்தால்
சரம்சரமாய் தோடியாகும் உன்புகழைக் கோர்த்தால்

வானம்வரை அடுக்கிடுவேன் நான்வடிக்கும் நூலை
வாழும்வரை தொடுத்திடுவேன் நாதனது வேலை
வாடும்வரை கொடுத்திடுவேன் உனக்கான நாளை
வாழ்த்திடநீ வந்துவிடு தினந்தோறும் காலை

- காகிதன்

கலைவாணியே...3

















திருத்தொண்டன் நான்புரியும் திருபூஜை தன்னை
மனங்கொண்டு ஏற்றிடுவாய் கவிகாக்கும் அன்னை
வீருகொண்டு கவியேற்றும் சிறுபிள்ளை என்னை
கூறுகண்டு போற்றிடுவாய் கலைமகளே என்னை

ஒளியெல்லாம் உன்போல ஒளிராது என்றும்
ஒலியெல்லாம் உனைபோல ஒலிக்காது இன்றும்
மொழியெல்லாம் உன்போல இனிக்காது என்றும்
கலைச்செல்வி உன்புகழோ அழியாது என்றும்

முத்தமிழை உலகிற்கு அளித்தாயே அம்மா
இரத்தமெல்லாம் தேன்தமிழை நிறைத்தாயே அம்மா
புத்தியிலே உன்நினைவை வளர்த்தேனே அம்மா
பித்தனெனை வித்தகனாய் உணர்ந்தேனே அம்மா

பூமியிலே பிறந்தயென்னை கவியெழுத வைத்தாய்
ஊமையெனை வரத்தாலே சுரம்பாட வைத்தாய்
நாமகளே நாதன்எனை கவியாக்கி பார்த்தாய்
என்மதியை உன்மதியால் நூலாக்கித் தைத்தாய்

- காகிதன்

கலைவாணியே...2





















விருந்தோம்பல் உனக்காக படைப்பேனே தேவி
விருந்தாக கவிநூறு படிப்பேனே கூவி
தவறாமல் வருவாயோ கலைவாணி தாயே
தவக்கோலம் அணிவேனே வரவேண்டும் நீயே

மலரெல்லாம் உன்வாசம் அறிவேனே நானும்
மனமெல்லாம் உன்நேசம் அறிவாயோ நீயும்
உடலெல்லாம் பூரிக்கும் உனையென்னும் போது
உயிரெல்லாம் கூத்தாடும் உனைப்பாடும் போது

ஒருவார்த்தை சொன்னாலே உயிர்வாழ்வேன் நானே
உன்பேரைச் சொன்னாலே உளமுருகும் தானே
கண்ணோடு வாழ்ந்தவளே கனவேடு வாராய்
என்னோடு கலந்தவளே நினைவேடு நில்லாய்

அழகான பொற்சிலயே சிரித்தாயே பூவாய்
அரங்கேறும் என்கவியோ பொலிவான நூலாய்
அணைப்பாயோ என்னைநீ பாசமிகு தாயாய்
இருப்பேனே என்றென்றும் நேசமிகு சேயாய்

- காகிதன்

கலைவாணியே...1





















சுதியோடு கவிபாட கொண்டேனே ஆசை
சுதிதேடி தவிக்கின்றேன் தருவாயோ பாட்டை
வருங்காலம் எனைகேட்கும் தரமான கோர்ப்பை
தருவாயோ கலைவாணி எனக்கந்த வாய்ப்பை

வெகுநாளாய் இருந்தேனே இருளென்னும் வீட்டில்
திருநாளில் புகுந்தேனே உன்னிதயக் கூட்டில்
சரிபாதி உனக்காக தருவேனே பாட்டில்
தரவேண்டும் அருள்வேண்டும் கவிபாடும் ஆற்றல்

பூங்கோதை புகழ்பாடும் வில்லி புத்தூரில்
பிறந்தேனே வளர்ந்தேனே பரந்தாமன் பேரில்
உனக்காக வடித்தேனே கவிமாலை நூறில்
ஒருமாலை அணிந்தேவா அசைந்தாடும் தேரில்

நாள்தோறும் புரிவேனே தவறாமல் பூசை
மறுக்காமல்நீ வரவேண்டும் அடியேனென் ஆசை
அறியாமல் நான்கேட்கும் பணிவான இச்சை
பொறுத்திடுக தவறென்றால் அறியேனென் பேச்சை

- காகிதன்