Pages

Friday, December 28, 2007

மரணத்தை வென்றவன்...

நொடியினில் தோன்றிடும் மரணத்தையே
வென்றவன் யாரது நீ சொல்லடா
தடைகளைத் தாண்டியே விடுபடவே
கற்றவன் யாரோ அவனேயடா!

தினசரி வாழ்க்கையை நிதம் எண்ணியே
நொந்திடும் மனிதன் யார் சொல்லடா
விதியதை நம்பியே வாழ்க்கையினை
வீதியில் விட்டவன் அவனேயடா!

விடியலைத் தேடியே வாழ்க்கையினை
வென்றவன் யாரு நீ சொல்லடா
வெயிலிலும் மழையிலும் பனியினிலும்
உழைத்திடும் வர்க்கம் அவனேயடா!

அலைந்திடும் மனதினை ஒருமனதாய்
அடக்கிடும் மனிதனை நீ சொல்லடா
நிலைதனை உணர்ந்திட்ட வாழ்க்கையினை
வாழ்ந்திட தெரிந்தவன் அவனேயடா!

அறத்தொடு பொருளும் இன்பத்தையும்
காத்திட தெரிந்தவன் யார் சொல்லடா
பிறப்பிலே மேன்மையை பழகிடவே
இறப்பிலும் தொடர்பவன் அவனேயடா!

- காகிதன்

Wednesday, December 12, 2007

கங்கா..!



வெந்த செங்கலில்
வேகாத வெயிலில்
தேகம் எரிய
தாகம் எடுக்க
தண்ணீர் கேட்கிறேன்
கொடுப்பதற்கு ஆளில்லை..

என் பெயர் கங்கா..!

Thursday, December 6, 2007

மனைவியின் ஆத்தீசூடி

அன்பான மனைவி
ஆறுதல்சொல்ல ஒரு தோழி
இல்லறத்திற்கு ஒரு துணை
ஈன்றவளுக்கு நிகரான தாய்
உனக்கும் சேர்த்து அழ ஒரு உறவு
ஊதியம் இல்லா பணியாள்
எப்போதும் உன்னோடு இருப்பவள்
ஏக்கத்தைத் தீர்க்கும் தீர்க்கதரிசி
ஐஸ்வர்யம் நிறைந்த மாது
ஒழுக்கமான வேசி
ஓவியமாய் ஒரு காவியம்
ஔடதமாய் நோய் தீர்ப்பவள்
அஃதே மனைவியின் சிறப்பு

Friday, November 30, 2007

உழைப்பவர் உலகம்

அழகிய சூரியன் உதித்திடும் நேரம்
பழம்பெரும் தியாகிகள் மாண்டதின் ஈரம்
உழவர்கள் அனுதினம் உழைத்ததன் சாரம்
உழைப்பவர் வர்க்கத்தின் உவமைகள் கூறும்

துடிப்புடன் உழைத்திடும் இளைஞர்கள் கோடி
வெடிப்புடன் உழைப்பதில் யாவரும்கில் லாடி
அடிக்கடி இடைபடும் இன்னல்கள் தேடி
பொடிபொடி யாக்குவர் அனைவரும் கூடி

தனியுகம் படைத்திடும் திறமைகள் உண்டு
பனியிலும் வெயிலிலும் உழைப்பவர் உண்டு
மனதிலே ஜெயித்திடும் உணர்வுகள் உண்டு
கனவிலும் நினைவிலும் ஜெயிப்பவர் உண்டு

புகழ்பெறும் ஆசையில்பணி மறப்பவர் இல்லை
இகழ்ந்திடும் போதிலும் வெறுப்பவர் இல்லை
புகலிடம் பொடிபட நினைப்பவர் இல்லை
அகத்தையும் புறத்தையும் தொலைப்பவர் இல்லை

சொர்க்கமும் நரகமும் அவரவர் பார்வையில்
சுற்றமும் சூழலும் தானென்ற போர்வையில்
கற்றலும் கேட்டலும் புரிந்திடும் கோர்வையில்
பெற்றிடும் இன்பங்கள் உழைப்பவர் வேர்வையில்

- காகிதன்

மனிதத்தைப் போற்றிடு

மேட்டிமை பேசாதே மேன்மையை உணர்த்திடு
நாட்டாமை செய்யாதே நாநிலம் வணங்கிடு
கூட்டமாய் நில்லாதே கூட்டத்தை நிறுத்திடு
ஓட்டமாய் ஓடாதே ஓட்டத்தை நிறுத்திடு

நேரிய வழியில் சீரிட பழகிடு
கூரிய பார்வையால் போரிட பழகிடு
சூரிய ஒளியாய் படர்ந்திட பழகிடு
சீரிடும் புலியாய் நடந்திட பழகிடு

தவறுகள் செய்திட தயங்கிநீ நின்றிடு
தவறுகள் இருப்பின் திருத்திட முனைந்திடு
தவறுகள் செய்வது தவறில்லை உணர்ந்திடு
தவறென தெரிந்தபின் செய்வதை நிறுத்திடு

தனக்கென வாழ்ந்திட ஒருவழி வகுத்திடு
தனக்கான பாதையில் துணிவுடன் நடந்திடு
தனக்கென்ற பாணியில் தனித்துவம் புரிந்திடு
தனிமையை முழுமையாய் மாற்றிட தெளிந்திடு

பிறருக்கு உதவியாய் இருப்பதில் மகிழ்ந்திடு
பிறரது துன்பத்தை போக்கிட நினைத்திடு
அறத்துடன் பொருளுடன் இன்பமாய் வாழ்ந்திடு
பிறந்ததன் பயனாய் மனிதத்தைப் போற்றிடு

- காகிதன்

வாழ்க்கையைத் தேடு

பறவைகள் பறப்பது விடியலைத் தேடி
பறவையாய்ப் பறந்திடு வாழ்க்கையைத் தேடி
சிறகுகள் முளைப்பது பறந்திடத் தானே
சிறகினை வளர்த்திடு விண்ணிலே பறந்திடு

யாரும் சொல்லாத வார்த்தைகள் தேடு
யாரும் செல்லாத வழியினை நாடு
நேரம் தவறாமல் உழைத்திடப் பழகு
பாரம் இல்லாத வாழ்க்கையே உனது

சிலையாய் இருந்தால் அழகாய் இருப்பாய்
சிற்பியா யிருந்தால் சிலையை வடிப்பாய்
சிலையா யிருந்து ஜொலிப்பதைக் காட்டிலும்
சிற்பியா யிருந்து சிலையினைப் படைத்திடு

கனவுகள் என்பது துக்கத்தில் இல்லை
கனவுகள் இருப்பின் தூக்கமும் தொல்லை
கனவுகள் கண்டிடு தூக்கத்தை வென்றிடு
கனவுகள் தானே வாழ்க்கையின் பூஞ்செடி

ஜனனமும் மரணமும் நொடியினில் நிகழ்ந்திடும்
ரணங்களும் பிணங்களும் கடைசியில் அடங்கிடும்
தயக்கமும் மயக்கமும் தினம்தினம் வந்திடும்
எழுச்சியும் மலர்ச்சியும் வாழ்க்கையைத் தந்திடும்

-காகிதன்

Saturday, November 24, 2007

ஏழையின் தீபாவளி

வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி
இவன் வீட்டிலோ இன்றுதான் தீபஒளி
புத்தம்புதிதாய் புத்தாடை இவனுக்கு
அடுத்த தீபாவளிவரை வேறாடையே திவனுக்கு

காய்ந்த விழிகளோடு அன்றலர்ந்த மலர்களாய்
துள்ளிவரும் பிள்ளைகளின் வெள்ளை சிரிப்பு
பலகாரம் பார்த்து பலமாதங்களாகிய விழிகள்
பழிச்சிடும் இந்நாள் இறுதிவரை மட்டும்

பக்கத்துவீட்டு வெடிச்சத்தம் இவர்கள் மகிழ்ச்சி
வெடிக்காத வெடிகளை பொறுக்க மனம்தேடும்
அன்றுமட்டும் அப்பா அடிக்கவேமாட்டார் ஏன்தெரியுமா
தினந்தோறும் அவர்கள் முதுகில் தீபாவளிவெடித்தவர்

அடுத்தவீட்டு அக்காதரும் பலகாரம் ருசியோருசி
அடுத்தவரிடத்தில் கையேந்தலை மறுக்கும் அப்பா
அன்றுமட்டும் எதுவும் சொல்வதில்லை பிள்ளைகளுக்காக
சந்தோஷம் மனதில் நிலைகொள்ளுமா நாளும்?

தீபாவளி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய இளையமகள்
அடுத்தெப்பப்பா தீபாவளி வரும்னு கேப்பா
இருப்பவன் வீட்டிலோ நாள்தோறும் தீபாவளி
இல்லாத நமக்கு இன்றுமட்டுந்தானம்மா

தீபாவளி பொழுதுவிடிந்தும் புத்தாடை களையாத பிள்ளைகள்
அழுதுபுலம்பும் அப்பாவின் கண்ணீர்
என்றுவரும் அடுத்த தீபாவளி
பிள்ளைகளை புத்தம்புதிதாய்ப் பார்க்க...

- காகிதன்

Monday, November 19, 2007

அப்ப அப்ப தீப்பிழம்பாய்..!

அப்ப அப்ப தீப்பிழம்பாய்
கொழுந்துவிட்டு எரியுதடா
கொஞ்சநேரம் அணையட்டுமே
கொழந்தபுள்ள சிரிக்கட்டுமே

எத்தனையோ நாட்டுக்குள்ள
எரிமலைகள் வெடிக்குதடா
ஏதுமில்லா ஊருக்குள்ள
குடுச மட்டும் எரியதடா

சோறு தண்ணி இல்ல இங்க
வயித்துபசி மட்டும் இங்க
ஆறு கொளம் நெறஞ்சா கூட
அர வயித்து கஞ்சிதான் இங்க

வானம் கூட சில நேரம்
வருத்தப்பட்டு அழுதாலும்
வயிறு எரிச்ச அடங்கலயே
வயித்துபசி தீரலயே

பத்தவைக்க அடுப்புமில்ல
பொங்கிதிங்க அரிசியில்ல
செத்துபோன ஒடம்பு மட்டும்
குடுசயோடு எரியுதடா

சுடுகாடு போனாகூட
எரிக்க காசு கேக்குறான்னு
ஏதுமில்லா ஏழ இங்க
எரியுராண்டா குடுசயோட...

- காகிதன்

பதில் சொல்லுங்கள்..!

எனக்கு பழக்கமான
என் சாலையோரத்து
மரங்களே...

அவள் உன்னை கடக்கையில்
என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?

அங்கே பூத்துக்குலுங்கும்
அழகிய மரமொன்று நடந்து செல்கிறதென்றா?

எனக்கு பழக்கமான
என் காலைநேர
சூரியனே...

அவள் உன்னைப் பார்க்கையில்
ஏன் உன் கண்களை மூடினாய்?

உன்னைவிட பிரகாசமான
அவன் கண்களை பார்த்ததாலா?

எனக்கு பழக்கமான
என் மாலைநேர
குயில்களே...

அவள் குரல்கேட்டு
ஏன் பாடுவதை நிறுத்திவிட்டீர்கள்?

அவள் குரலின் இனிமை கண்டு
மயங்கி போனதாலா?

எனக்கு பழக்கமான
என் இரவுநேர
சந்திரனே...

அவள் முகம் பார்த்து
ஏன் மேகத்திற்குள் ஒழிகிறாய்?

அவள் முகம் பார்த்து
பூமிக்கு ஒருநிலா
போதும் என்று எண்ணியதாலா?

எனக்கு பழக்கமான
என் தோட்டத்து
ரோஜாக்களே...

ஏன் செடியிலிருந்து
கீழே குதித்து தற்கொலை செய்கிறீர்கள்?

அவள் கூந்தலேறி
அமரந்துசெல்ல தகுதி இழந்ததாலா?

- காகிதன்

மழை..!

உலர்ந்த பூமியை
முத்தமிட்டு நனைக்கவந்த
ஒற்றைத்துளி நீயோ!

மேகக்காதலன்
பூமிக்காதலியைப் பார்த்து
வடித்த வா(ய்)நீரோ!

ஏழைவயல் நனைத்துப்
போகும் உயிர் காக்கவந்த
இறைகமண்டல நீரோ!

விளைநிலமல்லாது
களைநிலம்கூட வளர பகிர்ந்தளிக்கும்
சமநிலை இறை(ரை)யோ!

பள்ளி கல்லூரிகளுக்கு
இடைக்கால விடுமுறை அளிக்கவந்த
சட்ட வல்லுனரோ!

காலம் மறந்துவிட்டகடமைமுறைகளை
பருவம்தவறாமல்பெய்து
நினைவூட்டவந்த
உத்தம புருஷரோ!

நீலக்கடலுறுஞ்சி
கருமை நிறம் மாறி
பச்சைநிலம் செழிக்க
வெள்ளை நீர்கொடுக்கும்
வண்ண மாயனோ
மழையோ
நீயோ..!

-காகிதன்

Thursday, November 1, 2007

சிதறல்கள்

மலந்திடும் வாசப் பூவிலும்
புலர்ந்திடும் வைகறை பொழுதிலும்
வீசிடும் தென்றல் காற்றிலும்
பேசிடும் பிஞ்சுக் குழந்தையிலும்

தூவிடும் முத்துச் சாரலிலும்
கூவிடும் குயிலின் குரலிலும்
குளிர்ந்திடும் பௌர்ணமி நிலவிலும்
ஒளிர்ந்திடும் மாலை சூரியனிலும்

படர்ந்திடும் காலை பனியிலும்
நடந்திடும் பசுமை புல்வெளியிலும்
ஆடிடும் வண்ண மயிலிலும்
ஓடிடும் பஞ்சு மேகத்திலும்

உனக்கான என் காதலின்
எண்ணச் சிதறல்களை
ஒவ்வொரு துளியாய்
ஒவ்வொன்றிலும் சிதறவிட்டிருக்கிறேன்...

-காகிதன்

மாலை சூடும் மணநாள்

ஒருமுறை நடக்கும் திருநாள்
பலமுறை இனிக்கும் ஒருநாள்
இருவரை இணைக்கும் ஒருநாள்
திருமறை சொல்லும் மணநாள்

பலரது ஆசிகள் கொண்டு
மலரது மலர்வதைக் கண்டு
உளமது மகிழ்ச்சியில் இன்று
மிளிருது வாசணைச் செண்டு

கனவிலே கண்டிட்ட காட்சிகள்
நினைவிலே நடந்திடும் நீட்சிகள்
மனதிலே ஒளிர்ந்திடும் தீபங்கள்
உணர்விலே பதிந்திடும் ரூபங்கள்

உறவுகள் வாழ்த்திடும் நேரம்
உதடுகள் விரிந்திடும் தூரம்
நன்மைகள் விளங்கிடும் நேரம்
தீமைகள் விலகிடும் தூரம்

கொண்டவள் சிரித்திடும் போது
கண்டுநீ சிரித்திடு போதும்
அண்டமும் மகிழ்ந்திடும் வண்ணம்
கொண்டிடு வாழ்க்கையில் திண்ணம்

உன்னிடம் உள்ளதை கொடுத்தால்
தன்னிடம் உள்ளதை தருவாள்
சொன்னதை மனதில் வைத்தால்
எண்ணிய வாழ்க்கை கிடைக்கும்

- காகிதன்

காதல் ராகம்

கண்கள் இரண்டும் பார்க்கும் நேரமிது
காதல் பிறக்கிறது
கைகள் இரண்டும் கோர்க்கும் நேரமிது
கல்யாணம் நடக்கிறது.

பூவும் காற்றும் சேரும் நேரமிது
மோகம் பிறக்கிறது
தோளில் நீயும் சாயும் நேரமிது
தேகம் இனிக்கிறது.

வானும் மண்ணும் சேரும் நேரமிது
வான்மழை பொழிகிறது.
நீயும் நானும் சேரும் நேரமிது
இதயம் இனிக்கிறது.

காற்றில் ராகம் சேரும் நேரமிது
சங்கீதம் பிறக்கிறது
உன்னில் என்னை சேர்க்கும் நேரமிது
ஊடல் பிறக்கிறது.

- காகிதன்

திருமணம் ஆனால்..

புதுவெள்ளம் நெஞ்சுக்குள் தினம்துள்ளும்
பொழுதெல்லாம் மனசுக்குள் கதைசொல்லும்
இரவெல்லாம் இதயத்தில் குடிகொள்ளும்
பகலெல்லாம் இரவாக மாற்றச்சொல்லும்

புதுராகம் மனசுக்குள் தினம்கேட்கும்
புதுப்பூக்கள் நெஞ்சத்தில் தினம்பூக்கும்
கதிரவனை கண்டாலே வெறுப்பாகும்
பதிவிரதை துணையிருந்தால் சுகமாகும்

மனைவியது விருப்பத்தை அறியச்சொல்லும்
மனம்திறந்து அவளிடத்தில் பேசச்சொல்லும்
மகிழ்ச்சியிலே மற்றதெல்லாம் மறக்கச்சொல்லும்
மனமுவந்து இன்பத்தை அளிக்கச்சொல்லும்

துக்கத்தை தொலைதூரம் அழைத்துச்செல்லும்
தூக்கத்தை பலநேரம் இழக்கச்சொல்லும்
வெக்கத்தை அடியோடு மறக்கச்சொல்லும்
பக்கத்தில் அவளோடு இருக்கச்சொல்லும்

- காகிதன்

வேலைதேடி

வறுமைவந்து என்னிடத்தில் வக்கனையாய் சிரிச்சுநிக்க
வறுத்தெடுக்கும் வெயிலிலும் உழச்சிடவே மனம்துடிக்க
வருத்தமெல்லாம் இல்லயிங்க வயித்துபசி தாங்கலிங்க
பொருத்தமில்லா சூழ்நிலையால் வறுமையில மாட்டிக்கிட்டேன்

தெருத்தெருவா அலஞ்சிருக்கேன் வேலதேடித் தொலஞ்சிருக்கேன்
கருத்தவுடல் காரனென்றோ வேலதர மறுக்குறாங்க
ஒருத்தர்கூட முன்வரல வேலமட்டும் குதிரக்கொம்பாய்
ஒருத்தன்வந்தான் அவனுங்கூட வேலயில்ல ஓடிப்போன்னான்

படிச்சுபல பட்டமெல்லாம் வீட்டுலதான் வச்சுருந்தேன்
படிப்படியா முன்னேற பகல்கனவும் கண்டிருந்தேன்
படிச்சதெல்லாம் வீணாகி பலனில்லாம போனபின்ன
வடிச்சகண்ணீர் மட்டுந்தாங்க வீட்டுக்குள்ள நெறஞ்சிருக்கு

அப்பவேநான் அப்பாசொல்ல கேட்டிருந்தா பொழச்சிருப்பேன்
இப்பயில்ல புத்திசொல்ல அப்பாகூட போயிட்டாரே
வேலதேடி பயனுமில்ல விவசாயம் செய்யலான்னு
வயலதேடி போறேனுங்க வழியனுப்ப வாரிகளா?

- காகிதன்

இல்லறத் திருநாள்

அழகிய காதலின் அரங்கேற்றம்
பழகிய அன்பின் வெளித்தோற்றம்
இளகிய நெஞ்சத்தின் ஒருதோற்றம்
திருமண நாளாய் உருமாற்றம்

கலியுக ராமன் கைகளிலே
இணைந்தது ஜானகி பொற்கரங்கள்
சிலையென அவளை வடித்திடவே
ஒருவரு மில்லை தரணியிலே

உறவுகள் கூடி இருக்கையிலே
அரணது கைகள் இடுப்பினிலே
விரும்பிய இதயம் தடுக்கையிலே
அரும்பிய வெட்கம் யாரரிவார்

இமயவன் புரிந்திடும் சிலுமிஷங்கள்
இருதய சுரங்கத்தின் பொக்கிஷங்கள்
இளையவள் இதயத்தின் ரகசியங்கள்
இனித்தது மணவறை சம்பவங்கள்

தனிமையின் ரகசியம் அறிந்திடவும்
இனிமையின் இன்பத்தை விளக்கிடவும்
இணைந்தினி யில்லறம் நடத்திடவும்
இனியவன் துணையாய் வந்துவிட்டான்

காந்தனின் கரத்தை பிடிக்கையிலே
பூந்தளிர் உதட்டை கடிக்கயிலே
கூந்தலி லிருக்கும் பூக்களுமே
விழுந்தது வெட்கி தரையினிலே

ஆணின ஆதவன் முகம்பார்த்து
பேணிய பெண்மையை புறம்சாய்த்து
கூரிய பார்வையால் கோமகனை
உரித்தது கோதையின் கயல்விழிகள்

கனிந்தது காதல் நன்னாளில்
அணிந்தது மோகன பொன்னாளில்
இணைந்தது இருமணம் இந்நாளில்
இனித்தது இல்லற திருநாளில்

- காகிதன்

Friday, October 26, 2007

விழித்திடு..! எழுந்திடு..!

சத்திய வார்த்தைகள் சொல்லிட வா
நித்தமும் பூமியை வென்றிட வா
சத்தமாய் உண்மைகள் உரைத்திட வா
மொத்தமும் உன்னிடம் உணர்ந்திடு வா

பாதைகள் பலவிதம் அறிந்திடு நீ
சாதனை செய்திட பழகிடு நீ
மேதைகள் சொற்படி நடந்திடு நீ
மாதவம் புரிந்திடு ஜெயித்திட நீ

தோல்வியில் துவழ்வது வீர மில்லை
வேள்வியில் நடந்திடு பேத மில்லை
ஆழ்கடல் கண்டிடு மனதுக் குள்ளே
வாழ்வதும் வீழ்வதும் புதிது இல்லை

கோசங்கள் பரப்பிடும் மனிதருக் கிடையே
நேசங்கள் பரப்பிடு நெஞ்சிக்குள் தனியே
வேசங்கள் நிரம்பிய பூமிக்கு நடுவே
பாசங்கள் நிரப்பிடு மனிதரி னிடையே

பாவிகள் நிறைந்தது பூமி யறை
சாவிகள் கண்டுநீ மூடி மறை
சாவினை வென்றிடு முடிந்த வரை
காவியம் சொல்லிடும் உன் பெயரை

- காகிதன்