Pages

Saturday, November 26, 2011

நிகழ்வு கவிதை..4















50 வயது மதிக்கத்தக்க ஒருவருடன் சிறு வயதிலிருந்தே நட்பு கொண்ட மற்றொரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது நண்பர் தன்னை நிராகரித்து விட்டதாக வெகு அண்மையில் நடந்த சில விசயங்களை காரணம் காட்டி நண்பர் மீது கோபம் கொள்கிறார், விலகியும் செல்கிறார். ஆனால் இவர் கோபம் கொள்ளுமளவிற்கு குறிப்பிட்ட விசயங்கள் மிகவும் சாதாரணமானவை. (உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்). அவர் மிகவும் நல்லவர், சாந்தமானவர், இவரது நண்பன் இவ்வாறு கோபம் கொண்டு விலகிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் இவரது மனநிலையை கவிதையாக்குங்கள்.


என்னுடனே இருப்பேன் என்றவனே
என்னுயிர் தோழனே
இன்னுயிரை ஈய்ந்தால் கூட
என்னுடனே என்றவனே

எத்தனையோ சோதனை வந்தும்
இணைபிரியா நண்பர்களானோம்
சின்னதொரு காரணம் கண்டு
என்னை நீயும் கோவிக்கலாமா?

சாவுகூட நம்மைப் பிரிக்க
பயந்து நடுங்கும் வேளையிலே
தாவும்மனம் சொல்லைக்கேட்டு
என்னை நீயும் வெறுக்கலாமா?

வேண்டும் உன்தன் நட்புயென்று
வேண்டாமென்றேன் கோடிபொருளை
வேண்டாமென்று சொல்வதுயேனோ
வேண்டாசில வார்த்தைகளாலே

காலம்முழுதும் காத்துக்கிடப்பேன்
திரும்பியென்னை அழைத்திடு நீயும்
காலமென்ன சொல்வது நட்பை
நாளையேநீ வந்திடுவாயே..!

நிகழ்வு கவிதை..3














கடவுளைப் பற்றி அதிகம் நினையாத ஒரு சாதாரண உழைப்பாளி முன் கடவுள் தோன்றுகின்றார். அந்த மனிதனின் மனநிலை பற்றிய கவிதை வரையுங்க

உன் பொழுதைப் போக்க
என்னைக் பார்க்கவந்தாயோ..!
சிறிது ஓய்வெடுத்துக்கொள்
என் வேலையை
முடித்துவிட்டு வருகிறேன்.

நான் கொண்டுவந்த பழையசோறை
பானையில வச்சிருக்கேன்
பசியோடு வந்திருப்பாய்
போய் சாப்பிட்டு
பசியாறு பின் பேசலாம்

எல்லாத்தையும் சாப்பிட்டுறாத
எனக்கு கொஞ்சம் மிச்சம் வை
தொட்டுக்க ஊறுகாதான்
தயங்காம சாப்பிடு
தண்ணிகூட பக்கத்தில் இருக்கு

உங்கிட்ட ஒரு கேள்வி
ராமர் பாலத்தை
கட்டுனது யாரு?
…..
ஐயா கடவுளே நில்லுங்க
எங்க போறீங்க சாப்பிட்டாவது போங்க...

நிகழ்வு கவிதை..2





















ஒரு பெண்ணின் மனநிலை :
ஜாதியை காட்டி அவளை காதலனுடன் பெற்றோர் இணைய விடமாட்டார்கள்,
அவளும் அவனின்றி வேறு ஒருவரை திருமணம் செய்ய மாட்டாள்,
ஆனால் வீட்டை எதிர்த்து அவனுடன் சென்றிடவும் மாட்டாள்.
அவள் மனநிலையென்ன?
யாராவது விளக்குங்களேன்...

விடிந்தால் திருமணம்
முடிந்தால் இருபிணம்
ஒன்று என்னுடையது
மற்றொன்று என்
காதலனுடையது

நடக்காவிட்டாலும் கூட
இருபிணம் விழும்
அது என் தாய் தந்தையருடையது
எதுவேண்டும் எனக்கு?
என்ன செய்யட்டும் நான்?

தாய்தந்தையர் இல்லாமல்
காதலனுடன் மட்டும்
இன்பமான இல்வாழ்க்கை
நடத்தமுடியுமா?
என் உள்ளம் உறுத்தாதா?

திருமணம் செய்தால்மட்டும்
கணவருடன் சலனமில்லா
இல்லறத்தை தொடரமுடியுமா?
இது என் கணவருக்கு
செய்யும் துரோகமில்லையா?

மணமகனோடு பேசிப்பார்க்கலாமா?
குணமானவனாய் இருந்து
சரியென்று சொல்லிவிட்டால்
இருபிணங்கள் காக்கப்படுமே
இதோ செல்கிறேன் மணமகன் இல்லம்தேடி..!

நிகழ்வு கவிதை..1

ஒரு ஏழைத் தாய்.. வீட்டிலே வறுமை.. சட்டியில் இரு கவளம் தண்ணீர்ச் சோறு.. பள்ளி விட்டு வரும் தன் சிறு மகனுக்காக பொக்கிஷமாய் காத்திருந்து மகன் வரவுக்காய் காத்திருந்த வேளையில் பசி மயக்கத்தில் கண்ணயர.. சிறு சப்தம் கேட்டு விழிப்பு வருகிறது..

அங்கே... தன் மகனுக்காய் வைத்திருந்த உணவை, தன் வீட்டில் வசித்து குட்டிகள் ஈன்ற பூனையொன்று [பிரசவக் களைப்பில் இருந்து மீண்டு]உண்டு பசியாறுவதைக் காண்கிறாள்..

பூனையை விரட்டவும் மனமின்றி.. தன் வறுமையை விரட்டவும் வகையின்றி.. தவிக்கும் அந்தப் பரிதாபத்துக்குரிய தாயின் எண்ணவோட்டங்களை கவிதையில் வடியுங்கள் நண்பர்களே..!

காக்கைக்கு உணவிட்டு
காலை உணவு அருந்திய
காலம் மறைந்து
கால் வயிற்றுக் கஞ்சிக்கும்
காலனை நம்பும் காலம் வந்ததே..!

கணவனை இழந்தும்
கண்ணியமாக வாழ்க்கை நடத்தும்
கவரிமானின் நிலை இப்படிக்
கண்ணீர் சிந்தும் அளவிற்கு
கட்டுண்டு போனதே..!

பூஞ்செடிக்கு நீரூற்றி
பூனைக்கு பாலுற்றி
பூஜைக்கு நெய்யூற்றி
பூமிக்கே பெருமை சேர்த்தவளுக்கு
பூஜிக்க வழி இல்லையே..!

பாசமான பிள்ளை பசிக்காக
பானையிலே வச்சிருந்த
பழையசோறும் கூட இப்போ
பிரசவத்தில் களைச்சுப் போன
பூனைக்கென்று ஆனதே..!

பள்ளிக்கூடம் போன பிள்ளை
துள்ளிவந்து கேட்டிடுமே
பெற்ற பிள்ளை பசியப்போக்க
வற்றிப்போன என்தன் பாலை
சுரக்க செய்யி ஆண்டவனே..!

Monday, November 21, 2011

சோராதே..!

விழுந்த மழைத்துளிகள்
விண்ணை நோக்கியே
எழுந்து செல்கிறதே
மீண்டும் விழுந்திடத்தான்!

வாழ்க்கை அதுபோலே
வாழப் பழகிவிடு
ஏற்றம் தாழ்வென்பது
எப்போதும் நிலையென்று!

வெயிலை உணராமல்
நிழலில் நனையாதே
எதுவும் தெரியாது
சுகமும் அறியாது!

அறிந்தும் அறியாமல்
அகழியில் விழுந்தாலும்
அதிலும் நீந்திவிடு
அக்கரை சேர்ந்துவிடு!

இனியும் வருந்தாதே
இல்லை துயரொன்று
எழுந்து நடைபோடு
எல்லை வானென்று!