Saturday, January 5, 2008
கலைவாணியே...1
சுதியோடு கவிபாட கொண்டேனே ஆசை
சுதிதேடி தவிக்கின்றேன் தருவாயோ பாட்டை
வருங்காலம் எனைகேட்கும் தரமான கோர்ப்பை
தருவாயோ கலைவாணி எனக்கந்த வாய்ப்பை
வெகுநாளாய் இருந்தேனே இருளென்னும் வீட்டில்
திருநாளில் புகுந்தேனே உன்னிதயக் கூட்டில்
சரிபாதி உனக்காக தருவேனே பாட்டில்
தரவேண்டும் அருள்வேண்டும் கவிபாடும் ஆற்றல்
பூங்கோதை புகழ்பாடும் வில்லி புத்தூரில்
பிறந்தேனே வளர்ந்தேனே பரந்தாமன் பேரில்
உனக்காக வடித்தேனே கவிமாலை நூறில்
ஒருமாலை அணிந்தேவா அசைந்தாடும் தேரில்
நாள்தோறும் புரிவேனே தவறாமல் பூசை
மறுக்காமல்நீ வரவேண்டும் அடியேனென் ஆசை
அறியாமல் நான்கேட்கும் பணிவான இச்சை
பொறுத்திடுக தவறென்றால் அறியேனென் பேச்சை
- காகிதன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment