Pages

Saturday, February 2, 2008

முதல் பய(ண)ம்

அந்த கருவேலங்காட்டிக்குள் தனியாக நடந்து செல்வதென்றால் அதிவீர சூரன் கூட ஒரு நிமிடம் யோசிப்பான். வடிவேல் பிறந்தது முதலே மிகவும் பயந்த சுபாவம் உடையவன். உறங்கும்போதுகூட அவன் அம்மாவின் சேலைத் தலைப்பை பிடித்துக்கொண்டுதான் உறங்குவான். வடிவேலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இப்பொழுதும் இருட்டில் நடப்பதென்றால் அவனுக்கு அலாதி பயம்தான்.

ஒருநாள் வேலை முடிவதற்கு தாமதமானதால் அன்று இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்தான். அவன் ஊருக்குள் வரவேண்டுமானால் அந்த கருவேலங்காட்டை கடந்துதான் வரவேண்டும். பேருந்தில் வரும்போது அதையே நினைத்துக்கொண்டு வந்தான். அவன் நிறுத்தம் வந்ததும் இறங்கி நடுக்கத்துடன் நடக்க ஆரம்பித்தான். காட்டின் எல்லை தொடங்கியது. கண்களில் கண்ணீர் வந்தது வடிவேலுக்கு, இன்று எப்படி வீட்டிற்கு செல்வது என்று விழித்துக்கொண்டிருந்தான்.

காட்டின் உள்புறத்திலிருந்து ஏதோ ஒரு உருவம் கையில் குழந்தையுடன் நடந்துவருவது தெரிந்தது. ஆம் அது வடிவேலுவின் மனைவி விமலாதான். உங்களுக்கு இருள் என்றால் பயம் என்று அத்தை சொன்னார்கள் அதனால்தான் உங்களைக் கூட்டிச்செல்வதற்காக இங்கே காத்திருந்தேன், வாருங்கள் செல்லலாம் என்றாள் விமலா.

உலகத்தில் சூரியன் என்று ஒன்று இல்லாதவரை இந்த பூமியே இருட்டுதான். மனதில் தைரியம் என்ற சூரியன் இல்லாதவரை மனம் ஒரு இருண்ட அறைதான், விமலா அவனுக்கு அளித்த விளக்கம் அவன் மனதில் தைரியம் என்ற சூரியனை உதிக்கச்செய்தது. முதல்முறையாக வடிவேலு பயமில்லாத தன் முதல் பயணத்தைத் தொடங்கினான்.

No comments: