Pages

Saturday, November 26, 2011

நிகழ்வு கவிதை..1

ஒரு ஏழைத் தாய்.. வீட்டிலே வறுமை.. சட்டியில் இரு கவளம் தண்ணீர்ச் சோறு.. பள்ளி விட்டு வரும் தன் சிறு மகனுக்காக பொக்கிஷமாய் காத்திருந்து மகன் வரவுக்காய் காத்திருந்த வேளையில் பசி மயக்கத்தில் கண்ணயர.. சிறு சப்தம் கேட்டு விழிப்பு வருகிறது..

அங்கே... தன் மகனுக்காய் வைத்திருந்த உணவை, தன் வீட்டில் வசித்து குட்டிகள் ஈன்ற பூனையொன்று [பிரசவக் களைப்பில் இருந்து மீண்டு]உண்டு பசியாறுவதைக் காண்கிறாள்..

பூனையை விரட்டவும் மனமின்றி.. தன் வறுமையை விரட்டவும் வகையின்றி.. தவிக்கும் அந்தப் பரிதாபத்துக்குரிய தாயின் எண்ணவோட்டங்களை கவிதையில் வடியுங்கள் நண்பர்களே..!

காக்கைக்கு உணவிட்டு
காலை உணவு அருந்திய
காலம் மறைந்து
கால் வயிற்றுக் கஞ்சிக்கும்
காலனை நம்பும் காலம் வந்ததே..!

கணவனை இழந்தும்
கண்ணியமாக வாழ்க்கை நடத்தும்
கவரிமானின் நிலை இப்படிக்
கண்ணீர் சிந்தும் அளவிற்கு
கட்டுண்டு போனதே..!

பூஞ்செடிக்கு நீரூற்றி
பூனைக்கு பாலுற்றி
பூஜைக்கு நெய்யூற்றி
பூமிக்கே பெருமை சேர்த்தவளுக்கு
பூஜிக்க வழி இல்லையே..!

பாசமான பிள்ளை பசிக்காக
பானையிலே வச்சிருந்த
பழையசோறும் கூட இப்போ
பிரசவத்தில் களைச்சுப் போன
பூனைக்கென்று ஆனதே..!

பள்ளிக்கூடம் போன பிள்ளை
துள்ளிவந்து கேட்டிடுமே
பெற்ற பிள்ளை பசியப்போக்க
வற்றிப்போன என்தன் பாலை
சுரக்க செய்யி ஆண்டவனே..!

No comments: