Pages

Thursday, November 1, 2007

வேலைதேடி

வறுமைவந்து என்னிடத்தில் வக்கனையாய் சிரிச்சுநிக்க
வறுத்தெடுக்கும் வெயிலிலும் உழச்சிடவே மனம்துடிக்க
வருத்தமெல்லாம் இல்லயிங்க வயித்துபசி தாங்கலிங்க
பொருத்தமில்லா சூழ்நிலையால் வறுமையில மாட்டிக்கிட்டேன்

தெருத்தெருவா அலஞ்சிருக்கேன் வேலதேடித் தொலஞ்சிருக்கேன்
கருத்தவுடல் காரனென்றோ வேலதர மறுக்குறாங்க
ஒருத்தர்கூட முன்வரல வேலமட்டும் குதிரக்கொம்பாய்
ஒருத்தன்வந்தான் அவனுங்கூட வேலயில்ல ஓடிப்போன்னான்

படிச்சுபல பட்டமெல்லாம் வீட்டுலதான் வச்சுருந்தேன்
படிப்படியா முன்னேற பகல்கனவும் கண்டிருந்தேன்
படிச்சதெல்லாம் வீணாகி பலனில்லாம போனபின்ன
வடிச்சகண்ணீர் மட்டுந்தாங்க வீட்டுக்குள்ள நெறஞ்சிருக்கு

அப்பவேநான் அப்பாசொல்ல கேட்டிருந்தா பொழச்சிருப்பேன்
இப்பயில்ல புத்திசொல்ல அப்பாகூட போயிட்டாரே
வேலதேடி பயனுமில்ல விவசாயம் செய்யலான்னு
வயலதேடி போறேனுங்க வழியனுப்ப வாரிகளா?

- காகிதன்

No comments: